நகைக்கடையில் திடீர் தீ விபத்து
பண்ருட்டி நகைக்கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
பண்ருட்டி,
பண்ருட்டி லிங்கா ரெட்டிபாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 55). இவர் தாகூர் வீதியில் நகை மற்றும் அடகுக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் கோவிந்தராஜ் கடையை திறந்து வியாபாரம் பார்த்து கொண்டிருந்தார். அப்போது 11 மணியளவில் கடையின் பூஜை அறை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த கோவிந்தராஜ் மற்றும் ஊழியர்கள் உடனே கடையில் இருந்த நகை, பணத்தை எடுத்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதனிடையே தீ கடை முழுவதும் பரவி எரிந்தது. இது குறித்த தகவலின் பேரில் பண்ருட்டி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக கடையில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. கடையில் தீவிபத்து ஏற்பட்டதால் அருகில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. தீ விபத்து ஏற்பட்டவுடன் நகைகளை ஊழியர்கள் மற்றும் உரிமையாளர் வெளியே எடுத்து வந்ததால் அவை தப்பியது. தீ விபத்து குறித்து பண்ருட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.