அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
கடலூர் மாவட்டத்தில் அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.
கடலூர்,
அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்தத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்து இருந்தன.
ஆனால் வேலைக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பஸ் தொழிலாளர்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்து இருந்தது. இருப்பினும் நள்ளிரவே போராட்டம் தொடங்கும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்தன. இதையொட்டி கடலூர் அரசு போக்குவரத்து பணிமனையில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட நேற்று முன்தினம் நள்ளிரவே ஆயத்தமானார்கள்.
வேலைநிறுத்தம்
இருப்பினும் சிறிது நேரத்திற்கு பிறகு அவர்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து நேற்று அதிகாலை முதல் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதனால் அரசு பணிமனையில் இருந்து அரசு பஸ்கள் வெளியே செல்லவில்லை. அனைத்தும் பணிமனையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
இதையடுத்து தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் பணிமனையில் திரண்டு நின்றனர். அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட அரசு ஆதரவு பெற்ற சங்க நிர்வாகிகள் மட்டும் ஒரு சிலர் வந்து பஸ்களை இயக்கினர்.
இதன் காரணமாக பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடவில்லை. குறிப்பிட்ட சில அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் வேலைக்கு செல்லும் அதிகாரிகள், ஊழியர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் அவதி அடைந்தனர்.
பயணிகள் அவதி
ஆனால் அனைத்து தனியார் பஸ்களும் இயக்கப்பட்டன. இதனால் அந்த பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதேபோல் ஷேர் ஆட்டோ, ஆட்டோக்களிலும் கூட்டம் அதிகரித்தது.
இதேபோல் பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் என மொத்தம் 11 பணிமனைகளிலும் பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படவில்லை. மிக குறைந்த எண்ணிக்கையிலான பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். சில இடங்களில் தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்கள் வேலைக்கு சென்றனர். முன்னதாக அனைத்து பணிமனைகளிலும் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
நடவடிக்கை
இது பற்றி கடலூர் அரசு போக்குவரத்து பணிமனை அதிகாரி ஒருவர் கூறுகையில், 11 பணிமனைகளிலும் 540 பஸ்கள் 600-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பகல் 12 மணி வரை 460 பஸ்கள் இயக்கப்பட வேண்டிய நிலையில், 120 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. மாலை நிலவரப்படி 220 பஸ்கள் ஓடியது. சென்னை உள்ளிட்ட தொலை தூர பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. வேலைக்கு வராதவர்கள் மீது அரசு உத்தரவு படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆனால் தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், மாவட்டத்தில் 90 சதவீதம் பஸ்கள் ஓடவில்லை. கடலூர் பணிமனையை பொறுத்தவரை காலை நிலவரப்படி 15 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதே நிலை தான் மற்ற பணிமனைகளிலும் நீடித்தது என்றனர்.