பரமத்திவேலூரில் 3 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
பரமத்திவேலூரில் 3 கடைகளில் பூட்டை உடைத்து பணம், பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூரில் 3 கடைகளில் பூட்டை உடைத்து பணம், பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ரூ.50 ஆயிரம் திருட்டு
பரமத்திவேலூர் பள்ளி சாலை சக்திநகரில் பல்பொருள் மொத்த விற்பனை கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் சம்பாலால் (வயது 21) என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவு விற்பனையை முடித்து விட்டு கடையை பூட்டி சென்றார்.
பின்னர் மறுநாள் காலை கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் உள்ளே சென்று பார்த்தபோது, கடையின் மேஜை டிராயர் உடைக்கப்பட்டு, அதிலிருந்த விற்பனை பணம் ரூ.50 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.
மேலும் 2 கடைகளில்
இதேபோல், பள்ளி சாலையில் உள்ள ஜெராக்ஸ் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பணம் இல்லாததால் அங்கிருந்த ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினியை திருடிச்சென்றனர். மேலும் அதே பகுதியில் இருந்த மற்றொரு கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கு பணம், விலை உயர்ந்த பொருட்கள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
3 கடைகளில் அடுத்தடுத்து பூட்டு உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பரமத்திவேலூரில் அடுத்தடுத்து 3 கடைகளில் பூட்டை உடைத்து நடந்த திருட்டு சம்பவம், அந்த பகுதி வணிகர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இரவு நேரத்தில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று கண்காணிக்க வேண்டும் என்று வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.