கரூரில் நேற்று வழக்கம்போல் பஸ்கள் இயக்கம்
கரூரில் நேற்று வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்பட்டன.
கரூர்
வேலை நிறுத்த போராட்டம்
தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போக்குவரத்து கழகங்களில் வரவுக்கும் செலவுக்கும் இடைப்பட்ட தொகையை அரசாங்கமே நிதியாக வழங்க வேண்டும், 2020 ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன் வழங்கப்படவில்லை அதை உடனடியாக வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய அகவிலைப்படி உயர்வு நவம்பர் 2015 முதல் வழங்கப்படவில்லை, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தம் 18 மாதங்களாக போடப்படவில்லை உள்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்து பஸ்களும் இயக்கம்
கரூர் மண்டலத்தில் கரூர் 1, 2, அரவக்குறிச்சி, குளித்தலை, முசிறி உள்ளிட்ட 5 பணிமனைகள் உள்ளன. இங்கிருந்து தினமும் 258 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் 127 உள்ளூர் பஸ்களும், 131 வெளியூர் பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தொழிற்சங்கங்கள் நேற்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் கரூரில் தினமும் இயக்கப்படும் 258 பஸ்களும் வழக்கம்போல் இயங்கின.
இதனால் பயணிகள் எவ்வித சிரமமின்றி, தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு சென்று வந்தனர். இதேபோல் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் சிரமமின்றி சென்று வந்தனர். கரூரை பொறுத்தவரை வழக்கம்போல் அனைத்து பஸ்களும் இயங்கின. அதேபோல் தனியார் பஸ்கள் அனைத்தும் இயங்கின.