திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகள் பாடை கட்டி நூதன ஆர்ப்பாட்டம்.

திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகள் பாடை கட்டி நூதன ஆர்ப்பாட்டம்

Update: 2021-02-25 18:46 GMT
திருவண்ணாமலை

ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட  மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.3 ஆயிரம் வழங்கப்படுவது போல் தமிழகத்திலும் குறைந்தபட்சம் 40 முதல் 70 சதவீதம் வரை உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.3 ஆயிரமும், கடும் ஊனமுற்றோரான 70 முதல் 100 சதவீதம் வரை உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரமும் தமிழக அரசு உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.

தனியார் துறை பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் 5 சதவீதம் வேலைவாய்ப்புக்கான இடங்களை உத்தரவாதப்படுத்த அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 23-ந் தேதி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் திருவண்ணாமலையில் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கைது செய்யப்பட்டு திருவண்ணாமலையில் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களில் சிலர் மண்டபத்தில் இருந்து வெளியே செல்ல மறுப்பு தெரிவித்து அங்கேயே நேற்று முன்தினம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அவர்கள் பாடை கட்டி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பாடையை தூக்கிய படி அறிவொளி பூங்கா முன்பு வந்தனர். பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியபடி ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். இதில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 57 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்