ஊர் தலைவரை கொலை செய்தவருக்கு ஆயுள்தண்டனை

ஊர் தலைவரை கொலை செய்தவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது

Update: 2021-02-25 18:11 GMT
ராமநாதபுரம், பிப்.26-
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ளது இருவன்பச்சேரி கிராமம். இந்த ஊரைச்சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது43). ஊர் தலைவராக இருந்து வந்த இவர் அவருக்கு முன்னர் தலைவராக இருந்த செல்லமுத்து மகன் காளிதாஸ் என்ற காளீஸ்வரன் (45) என்பவரிடம் கணக்கு விவரங்கள் கேட்டுள்ளார். இதுதொடர்பாக இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த காளீஸ்வரன் கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 18-ந் தேதி ஜெய்சங்கரை மோட்டார் சைக்கிளால் மோதி படுகாயப்படுத்தினாராம். மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்து வந்த ஜெய்சங்கர் சிகிச்சை பலனின்றி இறந்துபோனார்.
இதுதொடர்பாக அவரின் தந்தை சின்னத்தம்பி அளித்த புகாரின் அடிப்படையில் ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காளீஸ்வரனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி சண்முக சுந்தரம் மேற்கண்ட காளீஸ்வரனுக்கு ஆயுள்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கே.என்.கருணாகரன் ஆஜரானார்.

மேலும் செய்திகள்