சுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம்
திருவாடானை அருகே சுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
தொண்டி,
திருவாடானை தாலுகா பிராந்தன் வயல் சிறுமலைக்கோட்டை சுப்பிரமணியர் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனையொட்டி யாகசாலையில் தேவகோட்டை ராமலிங்க சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் நான்கு கால யாக வேள்விகளை நடத்தினர். யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் குடங்களை மேளதாளங்கள் வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோவிலை வலம் வந்தனர். தொடர்ந்து கோவிலின் 3 நிலை கொண்ட ராஜகோபுரம், மூலஸ்தான கோபுரங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கருவறையில் மகா அபிஷேகமும் பாலசுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது.தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பிராந்தன் வயல் சிறுமலைக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தில் கர்நாடகா மாநிலம் பெங்களூரு மற்றும் சென்னை, கோவை போன்ற பல்வேறு பகுதிகளில் வசிக்கும்சிறு மலைக்கோட்டை பிராந்தன் வயல் கிராம மக்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர். கோவிலை சங்கர் ஸ்தபதி வடிவமைத்து இருந்தார். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.