திருக்காஞ்சி கோவில் மாசிமக தேரோட்டம்
திருக்காஞ்சி கோவில் மாசிமக விழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இன்று மதியம் சங்கராபரணி ஆற்றங்கரையில் தீர்த்தவாரி நடக்கிறது.
வில்லியனூர், பிப்.24-
திருக்காஞ்சி கோவில் மாசிமக விழா தேரோட்டம் நடைபெற்றது. இன்று மதியம் சங்கராபரணி ஆற்றங்கரையில் தீர்த்தவாரி நடக்கிறது.
மாசிமக பிரம்மோற்சவம்
வில்லியனூர் அருகே உள்ள திருக்காஞ்சி கங்கவராக நதீஸ் வரர் கோவிலில் ஆண்டு தோறும் மாசிமக பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
11 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு சாமிக்கு திருக்கல்யாணம் மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
தேரோட்டம்
விழாவின் 9-ம் நாளான இன்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு பூஜைக்கு பின் உற்சவர் சிலை தேரில் எழுந்தருளியது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டு, காலை 9.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.
இந்து அறநிலையத்துறை ஆணையர் சிவசங்கரன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச்சென்றனர். முக்கிய வீதிகள் வழியாக சென்று மதியம் 12 மணி அளவில் தேர் கோவிலை வந்தடைந்தது. விழாவில் வில்லியனூர், புதுச்சேரி உள்பட பல்வேறு பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
தீர்த்தவாரி
மாசிமக விழாவில் சிகர நிகழ்ச்சியாக இன்று (வெள்ளிக்கிழமை) கோவில் அருகே உள்ள சங்கராபரணி ஆற்றங்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி சீத்தாராமன், சரவணா சிவாச்சாரியார் செய்து வருகின்றனர்.