குடகனாறு அணையில் தண்ணீர் திறப்பு

குடகனாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

Update: 2021-02-25 16:56 GMT
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே குடகனாறு அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 27 அடி. அணையின் நீர்மட்டம் 23.62 அடியாக உள்ளது. 

அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று திண்டுக்கல், கரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று குடகனாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி, கரூர் மாவட்ட கலெக்டர் மலர்விழி ஆகியோர் உத்தரவிட்டனர். 

அதன்பேரில் குடகனாறு அணையில் இருந்து பாசனத்திற்கு 2 வாய்க்கால்கள் மூலம் 90 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதில் வலது பிரதான வாய்க்கால் மூலம் வினாடிக்கு 54 கன அடி மற்றும் இடது பிரதான வாய்க்கால் மூலம் வினாடிக்கு 14 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. 

பொதுப்பணித்துறை நீர்வளத்துறை நங்காஞ்சியார் வடிநில கோட்டப்பொறியாளர் கோபி, குடகனாறு அணை உதவி செயற்பொறியாளர் முருகன் ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தனர். 

வலது மற்றும் இடது பிரதான வாய்க்கால்கள் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் கல்வார்பட்டி, பாலப்பட்டி, கூம்பூர், திருக்கூர்ணம், ஆர்.வெள்ளோடு மற்றும் கரூர் மாவட்டத்தில் அம்மாபட்டி, ஈசநத்தம் பெரியமஞ்சுவெளி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் சுமார் 9 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.  

மேலும் செய்திகள்