டாஸ்மாக் கடையை மூடக்கோரி எஸ்.டி.பி.ஐ.கட்சியினர் சாலை மறியல்
உளுந்தூர்பேட்டை அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி எஸ்.டி.பி.ஐ.கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனா்
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை அருகே புல்லூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது சிலர் டாஸ்மாக்கடையின் கதவை மூடி பூட்டு போட முயன்றனர். இதைப் பார்த்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடோடி வந்து அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த தாசில்தார் கோபாலகிருஷ்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி டாஸ்மாக்கடை அகற்றப்படும் என உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.