53 சதவீத அரசு பஸ்கள் இயங்கவில்லை
அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் எதிரொலியாக தேனி மாவட்டத்தில் 53 சதவீத அரசு பஸ்கள் இயங்கவில்லை.
தேனி:
வேலைநிறுத்தம்
அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்தத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் நேற்று காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.
அதன்படி, தேனி மாவட்டத்திலும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டத்தில் 7 இடங்களில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகள் உள்ளன. இங்கிருந்து தினமும் 365 பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.
இந்த பணிமனைகளில் சுமார் 2 ஆயிரத்து 400 பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் சுமார் 570 பேர் நேற்று வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.
53 சதவீத பஸ்கள்
மாவட்டத்தில் நேற்று பிற்பகல் நிலவரப்படி 171 பஸ்கள் இயக்கப்பட்டன. மொத்த பஸ்களில் 53 சதவீத பஸ்கள் இயக்கப்படவில்லை.
பணிமனை வாரியாக பழனிசெட்டிபட்டியில் மொத்தமுள்ள 87 பஸ்களில் 38 பஸ்களும், போடியில் 71 பஸ்களில் 37 பஸ்களும், தேவாரத்தில் 21 பஸ்களில் 4 பஸ்களும், கம்பம் முதலாவது பணிமனையில் 37 பஸ்களில் 18 பஸ்களும், 2-வது பணிமனையில் 70 பஸ்களில் 40 பஸ்களும், லோயர்கேம்ப்பில் 14 பஸ்களில் 3 பஸ்களும், பெரியகுளத்தில் 65 பஸ்களில் 31 பஸ்களும் இயக்கப்பட்டன.
நேற்று முகூர்த்த நாள் என்பதால் பஸ் நிலையங்களில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் பஸ்களில் சமூக இடைவெளியின்றி பயணித்தனர்.
கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் டவுண் பஸ்களில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலையத்தில் குறைவான எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்பட்டதால், வழக்கமான நெரிசல் இன்றி பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.