திருப்பூர் மாவட்டத்தில் பி.ஏ.பி. வாய்க்காலில் தண்ணீர் திருட்டை தடுக்காவிட்டால் பறக்கும்படையினர் மீது நடவடிக்கை கலெக்டர் விஜயகார்த்திகேயன் எச்சரிக்கை
திருப்பூர் மாவட்டத்தில் பி.ஏ.பி. வாய்க்காலில் தண்ணீர் திருட்டை தடுக்காத பறக்கும் படையினர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் விஜயகார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்தார்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் பி.ஏ.பி. வாய்க்காலில் தண்ணீர் திருட்டை தடுக்காத பறக்கும் படையினர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் விஜயகார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்தார்.
உயர்மின் கோபுரங்கள்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமை தாங்கினார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-
கொங்கு ராஜாமணி (கொங்குநாடு விவசாயிகள் கட்சி):-
கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய கடன்களை ரத்து செய்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம். 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க உத்தரவிட்ட முதல்-அமைச்சருக்கு நன்றி. 40 ஆண்டுகளுக்கும் மேலாக பி.ஏ.பி. பாசன திட்டம் விரிவாக்கத்துக்காக நில ஆர்ஜிதம் செய்யப்பட்ட விவசாயிகளின் கோரிக்கையான நில இழப்பீடு மதிப்பு மற்றும் கருணை தொகையை தற்கால நில மதிப்பீட்டில் உடனடியாக வழங்க வேண்டும்.
பவர்கிரிட் மற்றும் தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகத்தால் நிறுவப்பட்ட உயர்மின் கோபுரங்கள் அமைத்து விவசாய இடங்களில் நிலம், மரங்கள் உள்ளிட்டவைகளுக்கான இழப்பீடு கோவை மாவட்டத்தில் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் அதிகம் பேருக்கு இழப்பீடு வழங்கப்படாமல் உள்ளது. இழப்பீடு வழங்காமல் ஏமாற்றி வருவதாக விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். எனவே கோவை மாவட்டத்தில் வழங்கியதைப்போல் திருப்பூர் மாவட்டத்துக்கும் இழப்பீடுகளை உடனடியாக வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தண்ணீர் திருட்டு
காளிமுத்து (தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம்) :-
மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் உள்ள சந்தைகள், காய்கறி மார்க்கெட்டுகள், மீன் சந்தைகள், கழிப்பறைகள், பஸ் நிலையங்கள் உள்ளிட்டவை அனைத்து உள்ளாட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் குத்தகை இனங்கள் தற்போது 3 ஆண்டுகள் தனியார் குத்தகை வசூலிக்க ஏலம் நடைபெற்று வருகிறது. சுங்க வசூல் அதிகப்படியாக வசூலிக்கிறார்கள். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் கூட்டுறவு கடன் சங்கத்தில் வாங்கிய பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதற்கு தமிழக அரசுக்கு நன்றி. தள்ளுபடி பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் உடனடியாக பயிர்க்கடன் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை, தாராபுரம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் பேசியதாவது:-
பி.ஏ.பி. பாசன திட்டத்தில் இருந்து வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. ஆனால் வழியோரம் மின்மோட்டார்கள் வைத்து தண்ணீரை உறிஞ்சி திருடுவது அதிகரித்துள்ளது. இதுகுறித்து ஏற்கனவே புகார் தெரிவித்தோம். அதிகாரிகள் 4 நாட்களுக்கு ரோந்துப்பணி மேற்கொண்டனர். ஒரு சிலரை பிடித்தனர். ஆனால் அதிக அளவில் தண்ணீர் திருடுபவர்கள் மீது நடவடிக்கை இல்லை. ஒவ்வொரு முறையும் தங்களிடம் வந்து தண்ணீர் திருட்டு குறித்து புகார் தெரிவிக்க எங்களுக்கே சங்கடமாக இருக்கிறது. கடைமடை பகுதிக்கு தண்ணீர் கிடைக்காமல் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். தண்ணீர் திருட்டை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடும் நடவடிக்கை
கலெக்டர் விஜயகார்த்த்திகேயன்:-
பி.ஏ.பி.வாய்க்காலில் இருந்து மின்மோட்டார் வைத்து தண்ணீர் திருடுவதை தடுப்பதற்காக வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, மின்வாரியத்துறை, காவல்துறை ஆகியோர் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டு பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது எந்தவித பாரபட்சம் காட்டாமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் ஏற்கனவே இதுகுறித்து தெரிவித்து விட்டேன். தொடர்ந்து சோதனையில் ஈடுபட வேண்டும். தண்ணீர் திருடுபவர்கள் யாராக இருந்தாலும் தயக்கமின்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு தண்ணீர் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் சம்பந்தப்பட்ட பறக்கும்படையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக விவசாயிகள் என்னிடம் நேரடியாக புகார் தெரிவிக்கலாம் என்றார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பிரபு, இணை இயக்குனர் (வேளாண்மை) மனோகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மகாதேவன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.