அனுப்பர்பாளையம்
பல்லடத்தை அடுத்த பணப்பாளையத்தில் இருந்து திருப்பூர் ஆத்துப்பாளையத்திற்கு சோளத்தட்டு ஏற்றிய லாரி ஒன்று நேற்று மாலை வந்து கொண்டிருந்தது. லாரியை வலையங்காட்டைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவர் ஓட்டி வந்தார். அந்த லாரி ஆத்துப்பாளையம் மின்மயானம் அருகே வந்தபோது லாரியின் மேல்பகுதியில் கரும்புகை எழுந்தது. சிறிது நேரத்தில் லாரியில் இருந்த சோளத்தட்டு மளமளவென கொளுந்து விட்டு எரிய தொடங்கியது. இதை கண்ட அப்பகுதி மக்கள் திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து வடக்கு மற்றும் தெற்கு தீயணைப்பு நிலையங்களில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. பின்னர் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் லாரி எரிந்து சேதம் ஆகக்கூடாது என்பதற்காக லாரியில் இருந்த சோளத்தட்டை கீழே இறக்கி தீயை அணைத்தனர். இதில் சோளத்தட்டு முழுவதும் எரிந்து கருகியது. லாரிக்கு எந்த சேதமும் இல்லை. சுமார் 1½ மணி நேரம் போராடி தீயை முற்றிலும் அணைத்தனர். அந்த லாரியின் மேல்பகுதி அங்கு சென்ற மின்கம்பி மீது உரசியதில் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.