திருப்பூர்
அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் கடந்த 38 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்கள். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அங்கன்வாடி ஊழியர்களை 7-வது ஊதிய குழுவில் அரசு ஊழியராக்குவேன் என உறுதியளித்தார். ஆனால் இதுவரை அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் மாவட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது.
ஏற்கனவே 3 நாட்கள் தொடர் போராட்டம் நடந்த நிலையில், நேற்று 4-வது நாளாக காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதற்கு மாநில துணைத்தலைவர் பாக்கியம் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட செயலாளர் எல்லம்மாள், பொருளாளர் பேபி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். கடும் வெயிலில் இந்த போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதற்கிடையே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால், அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடத்தில், சேலைகளால் மேற்கூரை அமைத்துள்ளனர். வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள இவ்வாறு செய்துள்ளனர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என அங்கன்வாடி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.