தூத்துக்குடி மாவட்டத்தில் மழை, வெள்ளத்தில் சேதமடைந்த பயிர்களுக்கு ரூ.123 கோடி நிவாரணம் ஒதுக்கீடு கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.123 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.;

Update: 2021-02-25 13:09 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.123 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
விவசாயிகள் கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் மேல ஈரால் பகுதியில் 2016-17-ம் ஆண்டு மக்காசோளம் பயிரிட்ட 40 விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை இன்னும் கிடைக்கவில்லை. விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்கார் சாகுபடி தூத்துக்குடி மாவட்டத்துக்கு மட்டுமே வழங்கப்படும் பிரத்யேக அனுமதியாகும். இந்த ஆண்டு அணைகளில் நீர் இருப்பு நன்றாக இருப்பதால் முன்கார் சாகுபடிக்கு அனுமதி பெற மாவட்ட கலெக்டர் இப்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு அனுமதி பெற்றால் தான் பிசான சாகுபடி மார்ச் மாதத்தில் முடிவடைந்ததும் ஏப்ரல் மாதத்தில் முன்கார் சாகுபடியை விவசாயிகள் தொடங்க முடியும். மேலும் நாசரேத் பகுதியிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.
சடையநேரி
வாழை பயிருக்கு இதுவரை பயிர் காப்பீட்டு தொகை கிடைத்தது இல்லை. எனவே, வாழைப்பயிருக்கும் பயிர் காப்பீட்டு திட்ட இழப்பீடு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு ஏலக்கூடத்தில் வாழைத்தார்களுக்கு அடிப்படை விலையாக ரூ.25 நிர்ணயிக்க வேண்டும். கடம்பா குளம் மற்றும் மறுகால் ஓடையை தூர்வார வேண்டும். கயத்தாறு அருகே அரசன்குளத்தில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் கிணற்றை தனிநபருக்கு பட்டா வழங்கப்பட்டு உள்ளது. அதனை மீட்க வேண்டும்
மணிமுத்தாறு அணையில் இருந்து 3-வது மற்றும் 4-வது ரீச்சில் திறக்கப்பட்டு உள்ள தண்ணீர் சாத்தான்குளம் பகுதியில் உள்ள செட்டிகுளம் உள்ளிட்ட 8 குளங்களுக்கு இன்னும் வரவில்லை. அணையில் போதுமான தண்ணீர் இருப்பதால் இந்த குளங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். சடையநேரி கால்வாயை அகலப்படுத்தாமல், உயரத்தை அதிகரிக்க வேண்டும். அதில் 500 கன அடி தண்ணீர் திறந்து புத்தன்தருவை குளத்தை நிரப்ப வேண்டும். கருமேணியாற்றில் 7 தடுப்பணைகள் உள்ளன. சமீபத்தில் பலத்த மழை பெய்த போது, அந்த அணைகள் நிரம்பவில்லை. தண்ணீர் வீணாக வெளியேறி உள்ளது.
கயத்தாறில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும். தூத்துக்குடி உப்பாற்று ஓடையின் இரு கரைகளையும் பலப்படுத்தி சுற்றுவட்டார கிராம மக்களை வெள்ள பாதிப்பில் இருந்து நிரந்தரமாக காப்பாற்ற வேண்டும். கோரம்பள்ளம் குளத்தை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும். அத்திமரப்பட்டியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். கோரம்பள்ளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 2006-ம் ஆண்டு கடன் தள்ளுபடி நிலுவையில் உள்ள 41 விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். பயிர் காப்பீட்டு தொகை அனைத்து விவசாயிகளுக்கும் முறையாக கிடைக்க வேண்டும். பயிர் கடன் தள்ளுபடி உண்மையான விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும். தாமிரபரணி பாசன குளங்களை தூர்வார வேண்டும்.
மோசடி
கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடி விவகாரத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரிய அளவில் மோசடி நடந்து உள்ளது. ஆளும் கட்சியினர் தலைவர்களாக உள்ள கூட்டுறவு வங்கிகளில் போலி ஆவணங்கள் மூலம் பயிர் கடன் தள்ளுபடியில் முறைகேடுகள் நடந்து உள்ளன. இது தொடர்பாக முறையாக விசாரணை நடத்தி உண்மையான விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல வெள்ள நிவாரண தொகையை காலநிர்ணயம் செய்து அனைத்து விவசாயிகளுக்கும் முறையாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
ரூ.123 கோடி
இதற்கு பதில் அளித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பேசும் போது, தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் 1.04 லட்சம் எக்டேரில் வேளாண்மை பயிர்களும், 17 ஆயிரம் எக்டேரில் தோட்டக்கலை பயிர்கள் ஆக மொத்தம் 1.21 லட்சம் எக்டேர் பயிர்கள் சேதமடைந்து உள்ளன.
இந்த பயிர்களுக்கு நிவாரணத் தொகையாக 1 லட்சத்து 39 ஆயிரத்து 355 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.123.48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதில் 79 ஆயிரத்து 710 விவசாயிகளுக்கு ரூ.96 கோடியே 56 லட்சம் தொகை விடுவிக்கப்பட்டு விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள தொகையும் இன்னும் 4 அல்லது 5 தினங்களில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும். அதுபோல தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவு பயிர் கடன் ரூ.181 கோடி தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.
மாவட்டத்தில் முதல் கட்டமாக ஸ்ரீவைகுண்டம், பேய்க்குளம், பண்ணம்பாறை, வசவப்பபுரம், மணக்கரை, இருவப்பபுரம் ஆகிய 6 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. கூடுதலாக சில இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்க கோரி உள்ளனர். அந்த பகுதியிலும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். பயிர் சேதம் இழப்பீடு தொகை குத்தகைதாரர்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சரிவர பணியாற்றாமல் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
கூட்டத்தில் தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், உதவி கலெக்டர்கள் தனப்பிரியா (திருச்செந்தூர்), சங்கரநாராயணன் (தூத்துக்குடி), வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாலசுப்பிரமணியன், கூட்டுறவு இணைப் பதிவாளர் ரவிச்சந்திரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் சிவகாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்