10-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை
10-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை.
செங்குன்றம்,
செங்குன்றத்தை அடுத்த விளாங்காடுபாக்கம் கண்ணம்பாளையம் இலுப்பை தோட்டத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகள் மதுமிதா (வயது 16). இவர், புழல் அருகே உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு மதுமிதா, வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவர், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
அதில் தற்கொலை செய்த மதுமிதா, வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், அந்த காதல் தோல்வி அடைந்ததால் விரக்தியில் அவர் தீக்குளித்து தற்கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதுபற்றி அந்த வாலிபரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.