பூந்தமல்லி அருகே, அடுத்தடுத்து 6 வாகனங்கள் மோதி விபத்து - போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 6 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின. இதனால் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
பூந்தமல்லி,
பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் அருகே பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை ஏராளமான வாகனங்கள் சென்ற வண்ணம் இருந்தன. அப்போது முன்னால் சென்ற காரின் டிரைவர் திடீரென பிரேக் பிடித்து காரை நிறுத்தினார்.
அப்போது காருக்கு பின்னால் வந்த மற்றொரு கார், வேன், லோடு ஆட்டோ, டேங்கர் லாரி என 6 வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றன்மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இந்த சங்கிலி தொடர் விபத்தில் 2 வாகனங்களில் ஒருபுறமும், மற்ற 4 வாகனங்களின் இருபுறமும் என 6 வாகனங்களும் சேதம் அடைந்தன. வாகனங்களின் கண்ணாடியும் நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக அந்த வாகனங்களில் வந்த யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.
எப்போது போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த சாலையில் காலை நேரத்தில் அடுத்தடுத்து 6 வாகனங்கள் மோதிய விபத்துக்குள்ளானதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீரமைத்தனர்.