ரவுடி கொலை வழக்கு விசாரணை: கோர்ட்டில் ஆஜராகாத போலீஸ் துணை சூப்பிரண்டுக்கு பிடிவாரண்டு
போலீஸ் துணை சூப்பிரண்டுக்கு பிடிவாரண்டு
சேலம்:
வாழப்பாடி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). ரவுடியான இவர் கடந்த 2010-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக அப்போது வாழப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த உமாசங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் முதலாவது கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வருகிறது. தற்போது போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே தற்போது சேலம் ஊரக உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றும் உமாசங்கருக்கு இந்த வழக்கு தொடர்பாக சாட்சியம் அளிக்க கோர்ட்டில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கு விசாரணையின் போது உமாசங்கர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி ஆபிரகாம் லிங்கன் உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கை வருகிற 5-ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.