நெல்லையில் 8 போலீஸ் நிலையங்களுக்கு 33 நவீன கேமராக்கள்- துணை கமிஷனர் சீனிவாசன் வழங்கினார்

நெல்லையில் 8 போலீஸ் நிலையங்களுக்கு 33 நவீன கேமராக்களை, துணை கமிஷனர் சீனிவாசன் வழங்கினார்.

Update: 2021-02-24 21:24 GMT
நெல்லை, பிப்:
நெல்லை மாநகர பகுதியில் உள்ள 8 போலீஸ் நிலையங்களுக்கு 33 நவீன கேமராக்களை துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் வழங்கினார்.

நவீன கேமராக்கள்

போலீசாரின் பயன்பாட்டுக்கு என்று உடலில் அணியும் புதிய நவீன கேமராக்களை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் போலீசார் மேற்கொள்ளும் பணிகளை கண்காணிக்க உடலில் அணியும் நவீன கேமராக்களை நெல்லை மாவட்டத்தில் மானூர், நாங்குநேரி, வள்ளியூர், களக்காடு, சுத்தமல்லி ஆகிய 5 போலீஸ் நிலையங்களுக்கு தலா 3 கேமராக்கள் வீதம் 15 கேமராக்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.
இதை நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் வழங்கினார். இந்த நிலையில் மாநகர பகுதியில் உள்ள 8 போலீஸ் நிலையங்களுக்கு தலா 4 நவீன கேமராக்கள் மற்றும் ஒரு போலீஸ் நிலையத்தில் கூடுதலாக ஒரு நவீன கேமரா என மொத்தம் 33 கேமராக்களை மாநகர சட்டம் ஒழுங்கு பிரிவு துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் நேற்று வழங்கினார்.

இதைத்தொடர்ந்து போக்குவரத்து போலீசாருக்கு போக்குவரத்து பிரிவு துணை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் கேமராக்களை வழங்கினார்.

போட்டோ எடுக்கும் வசதி

இதை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் கூறுகையில், இந்த கேமராக்கள் மூலம் போலீசார் வாகன சோதனை, மனு விசாரணை, ரோந்து செல்லுதல், போக்குவரத்தை சீர் செய்தல் போன்ற போலீசாரின் பல்வேறு பணிகளுக்கும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் வீடியோ, ஆடியோ, போட்டோ எடுக்கும் வசதி உள்ளது என்றார்.
அப்போது உதவி போலீஸ் கமிஷனர் ஆறுமுகம், நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்