அறிவொளி நகரில் குடிநீர் தட்டுப்பாடு தீர்வு காண கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயனிடம், பல்லடம் அறிவொளிநகர் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த பொதுமக்கள் ஒரு மனு கொடுத்தனர்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயனிடம், பல்லடம் அறிவொளிநகர் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த பொதுமக்கள் ஒரு மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
அறிவொளி நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறோம். சில ஆண்டுகள் குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக குடிநீர் வினியோகம் சரியாக இல்லை. குடிநீர் தட்டுப்பாட்டால் கடும் அவதியடைந்து வருகிறோம்.
குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.