பா.ஜ.க. கூட்டணியில் புதிய கட்சிகள் இணைவது குறித்து விரைவில் முடிவு
பா.ஜ.க. கூட்டணியில் புதிய கட்சிகள் இணைவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படு்ம் என்று எச்.ராஜா கூறினார்.
திருவிடைமருதூர்:
பா.ஜ.க. கூட்டணியில் புதிய கட்சிகள் இணைவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படு்ம் என்று எச்.ராஜா கூறினார்.
பேட்டி
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள கோவிந்தபுரத்திற்கு வருகை தந்த பா.ஜனதா முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பலவீனப்படுகிறது
தமிழக அரசியலில் நாளுக்கு நாள் தி.மு.க. பலவீனப்படுகிறது. பல தரப்பினர் இன்று பா.ஜனதாவில் வந்து சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதை ஸ்டாலின் எதிர்ப்பது மக்களிடம் சலிப்பை உண்டாக்கி உள்ளது. வருகிற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தான் மீண்டும் வெற்றி பெறும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்று பொய் பேசுவது எல்லோருக்கும் ஒரு வழக்கமாக உள்ளது 2004-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது பெட்ரோல்35 ரூபாய். மோடியிடம் ஆட்சியை கொடுத்தபோது பெட்ரோல் 74 ரூபாய். 10 வருடத்தில் 39 ரூபாய் கூடியுள்ளது. இப்போது 7 வருடத்தில் 18 ரூபாய் கூடியுள்ளது.
இதேபோல் 2004-ல் ஒரு கியாஸ் சிலிண்டரின் விலை 266 ரூபாய். 2014-ல் ஆட்சியை ஒப்படைக்கும்போது சிலிண்டர் விலை 920 ரூபாய். தற்போது சிலிண்டர் 780 ரூபாய். காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததை விட தற்போது 140 ரூபாய் சிலிண்டருக்கு குறைந்துள்ளது. எனவே இனிமேலும் பொய்களை பரப்புவதை அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
பா.ஜ.க. கூட்டணியில் புதிய கட்சிகள்
விக்ரவாண்டியிலும், நாங்குநேரியிலும் தி.மு.க., காங்கிரஸ் தொகுதியை அ.தி.மு.க. கைப்பற்றியது. அப்போது அ.ம.மு.க. தனியாகத்தான் இருந்தது. அதனால் இப்போது எப்படி பாதிப்பு வரும்?.
இப்போது ஒரு பிளவு ஏற்பட்டால்தான் அது விவாதத்துக்குரிய செய்தியாகும். ஆனால் நான்கு வருடமாக தனித் தனிக் கட்சியாக இருவரும் செயல்படுகிறார்கள் அதனால் தற்போது பாதிப்பு ஒன்றும் இருக்காது. பா.ஜ.க. கூட்டணியில் புதிய கட்சிகள் இணைவது குறுகிய காலத்தில் முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.