தெலுங்கானா மாநில செயலாளர் குமரிக்கு வருகை
குமரி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளின் செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொள்ள தெலுங்கானா மாநில செயலாளர் ஸ்மித்தா சபர்வால் தலைைமயில் அதிகாரிகள் குமரிக்கு வந்தனர்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளின் செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொள்ள தெலுங்கானா மாநில செயலாளர் ஸ்மித்தா சபர்வால் தலைைமயில் அதிகாரிகள் குமரிக்கு வந்தனர்.
ஆலோசனை கூட்டம்
தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நல திட்டங்களை தெரிந்து கொண்டு அதை தெலுங்கானா மாநிலத்தில் செயல்படுத்துவதற்காக அம்மாநில முதல்-அமைச்சரின் செயலாளர் ஸ்மித்தா சபர்வால் தலைமையில் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நேற்று குமரி மாவட்டம் வந்தனர்.
பின்னர் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், வருவாய் அதிகாரி ரேவதி, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் ஆகியோர் கலந்துகொண்டனர்.
வளர்ச்சி திட்ட பணிகள்
கூட்டத்தின் போது, மாவட்ட மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை, சமூக நலத்துறை, காவல்துறை, குழந்தை பாதுகாப்பு அலகு உள்பட பல்வேறு துறைகள் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் செயல்படுத்துவது குறித்து தெலுங்கானா மாநில முதல்-அமைச்சரின் செயலாளர் ஸ்மித்தா சபர்வால் கேட்டறிந்தார்.
அவருடன் தெலுங்கானா மாநில பழங்குடியினர் நலத்துறை செயலாளர் கிறிஸ்டினா இசட்.சோங்து, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை ஆணையர் கருணா மற்றும் அதிகாரிகள் ஷிகா கோயல், சுவாதி லக்ரா, சுமதி, பிரியங்கா வர்க்கீஸ் ஆஷா உள்ளிட்டோரும் உடனிருந்தனர். இந்த குழுவினர் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.