கீரனூர் அருகே பட்டப்பகலில் துணிகரம்: விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை- ரூ.2 லட்சம் கொள்ளை காரில் வந்த மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
கீரனூர் அருகே பட்டப்பகலில் விவசாயின் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை- ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற காரில் வந்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கீரனூர்:
வளைகாப்பு நிகழ்ச்சி
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரை அடுத்த வடக்குப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 52). விவசாயியான இவரது வீடு விராலிமலை செல்லும் சாலையில் ஒதுக்குப்புறமாக உள்ளது. நேற்று சுப்பிரமணியன் குடும்பத்தினர் அனைவரும் திருமணம் மற்றும் வளைகாப்பு நிகழ்ச்சிகளுக்கு வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டனர்.
இதையடுத்து காலை 10 மணி அளவில் காரில் வந்த மர்ம நபர்கள் வீட்டின் அருகே காரை நிறுத்திவிட்டு காரிலிருந்து இறங்கிய 2 பேர் வீட்டு வாசலில் சென்று வீட்டின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் சிறிது நேரம் கழித்து அங்கு தயாராக நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறி தப்பிச் சென்றனர்.
40 பவுன் நகைகள் கொள்ளை
மேலும் அடையாளம் தெரியாத சிலர் சுப்பிரமணியன் வீட்டுக்கு வந்து சென்றதை அறிந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. மேலும் பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக சுப்பிரமணியனுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து பதறியடித்து சுப்பிரமணியன் வீட்டிற்கு வந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, தலையணைக்கு அடியில் வைத்து இருந்த பீரோ சாவியை எடுத்து பீரோவில் இருந்த 40 பவுன் நகைகள் மற்றும் 2 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது ெதரியவந்தது.
போலீசார் விசாரணை
இது குறித்து கீரனூர் போலீசாருக்கு சுப்பிரமணியன் தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் யாரும் சிக்கவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணையில் வீடு ஒதுக்குபுறமாக இருந்ததையும், வீட்டில் யாரும் இல்லாததையும் அறிந்த மர்ம நபர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்தனர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களும் சேகரிக்கப்பட்டது. இதையடுத்து காரில் வந்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஒரு சில நாட்களுக்கு முன்பு கீரனூர் கடைவீதியில் நடந்து சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பெண்ணின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கலியை பறித்து சென்றனர். அதனை தொடர்ந்து தற்போது பட்டப்பகலில் வீடு புகுந்து நகை-பணம் கொள்ளை போனது பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.