பெரியகருப்பர் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு; 5 வீரர்கள் காயம்

பெரியகருப்பர் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் 5 வீரர்கள் காயமடைந்தனர்.

Update: 2021-02-24 19:09 GMT
ஜல்லிக்கட்டு
பொன்னமராவதி:
ஜல்லிக்கட்டு
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் புதுப்பட்டி கிராமத்தில் உள்ள எல்லைக்காடு திடலில், பெரியகருப்பர் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. 
இதை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார் தலைமையில், மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் வருவாய் கோட்டாட்சியர் கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். முதலில் வாடிவாசலில் இருந்து கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
இதில் 195 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு வீரர்கள் அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவராம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் மதுரை, திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
5 பேர் காயம்
காளைகள் முட்டியதில் 5 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக் குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டில் காளைகள் அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், பீரோ, குக்கர், மிக்சி, மின்விசிறி, வேட்டி, வெள்ளி, தங்க நாணயம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.   
 இதில் மதுரை, திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திண்டுக்கல் மற்றும் பொன்னமராவதி உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டை கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கண்டியாநத்தம் புதுப்பட்டி பொதுமக்கள் செய்திருந்தனர்.
பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் உள்ளிட்ட 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தாசில்தார் பழனிச்சாமி தலைமையில் 150 வருவாய்த்துறையினரும் இந்தப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்