நாமக்கல் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2,049 ஆக குறைந்தது தேர்தல் பிரிவு அதிகாரிகள் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2,049 ஆக குறைக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2021-02-24 19:05 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், குமாரபாளையம் என 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவற்றில் 1,623 வாக்குச்சாவடிகள் இருந்தன. கொரோனா கால பாதிப்பை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் உத்தரவின்படி 1,000 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டு, கூடுதலாக 512 சாவடிகள் ஏற்படுத்தப்பட்டன.

ஆனால் தற்போது அதிலும் மாற்றம் செய்து 1,050-க்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. அதனடிப்படையில் தற்போது மொத்தம் உள்ள 2,135 வாக்குச்சாவடிகளில் 86 வாக்குச்சாவடிகள் குறைக்கப்பட்டு உள்ளன.

தற்போதைய நிலவரப்படி நாமக்கல் சட்டசபை தொகுதியில் 377, ராசிபுரத்தில் 332, சேந்தமங்கலத்தில் 342, திருச்செங்கோட்டில் 323, பரமத்திவேலூரில் 317, குமாரபாளையத்தில் 358 என மொத்தம் 2,049 வாக்குச்சாவடிகள் உள்ளன.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி ஒட்டு மொத்தமாக 14 லட்சத்து 41 ஆயிரத்து 201 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலுக்கு முன்பு துணை வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். தற்போது அதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக பெறப்பட்டு வருகிறது. அப்போது வாக்காளர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

ஒரு சட்டசபை தொகுதியில் 16 வேட்பாளருக்கு மேல் போட்டியிடும் பட்சத்தில் 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தபடும். அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளுக்குமாக 3,612 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 2,672 கட்டுப்பாட்டு எந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் கருவி (விவிபேட்) 2,807 எண்ணிக்கையில் தயாராக வைக்கப்பட்டு உள்ளன. பெங்களூரை சேர்ந்த பெல் நிறுவன பொறியாளர்கள் அவற்றை சரிப்பார்த்து தேர்தலுக்கு பயன்படுத்த தகுதியானது என்ற சான்றிதழை வழங்கி சென்று இருப்பதாகவும், கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள கிடங்கில் தயார் நிலையில் அவை போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருப்பதாகவும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்