உதவித்தொகையை உயர்த்தக்கோரி கறம்பக்குடியில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்
உதவித்தொகையை உயர்த்தக்கோரி கறம்பக்குடியில் மாற்றுத்திறனாளிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கறம்பக்குடி:
கோரிக்கைகளை வலியுறுத்தி
தெலுங்கானா, புதுச்சேரிகளில் உள்ளது போல் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக ஆக உயர்த்தி வழங்க வேண்டும். கடும் ஊனமுற்றோருக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.
தனியார் துறையில் வேலை வாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் கறம்பக்குடி ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
சாலை மறியல்
இந்நிலையில் நேற்று கறம்பக்குடி தாலுகா அலுவலகம் முன்பு திரண்ட மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் திடீரென தாலுகா அலுவலகம் எதிரே கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த கறம்பக்குடி தாசில்தார் விசுவநாதன், ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துராஜா, போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன்ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சாலைமறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஈடுபட்டனர். கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டத்தை தொடர போவதாக அறிவித்து உள்ளனர்.