ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் கைது

திருவாரூரில், லாரி உரிமையாளரிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அவரது டிரைவரும் பிடிபட்டார்.

Update: 2021-02-24 18:29 GMT
திருவாரூர்;
திருவாரூரில், லாரி உரிமையாளரிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அவரது டிரைவரும் பிடிபட்டார். 
லாரி உரிமையாளர்
திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள மேனாங்குடி பகுதியை சேர்ந்தவர் குமார். இவர், பேரளம் லாரி உரிமையாளர் சங்க தலைவராக இருந்து வருகிறார். 
நேற்று முன்தினம் காலை இவருடைய லாரி, கரூரில் இருந்து எம். சாண்டு ஏற்றிக்கொண்டு பேரளம் நோக்கி வந்து கொண்டிருந்தது.  திருவாரூர் அருகே சொரக்குடி அய்யனார்கோவில் அருகில் இந்த லாரி வந்தபோது அங்கு நன்னிலம் தாசில்தார் லட்சுமி பிரபா(வயது 52) லாரியை நிறுத்தி சோதனை நடத்தினார். 
ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டார்
இந்த சோதனையின்போது விதிமுறைகளை சரியாக பின்பற்றி எம்.சாண்டு ஏற்றி வரவில்லை என கூறிய தாசில்தார் லட்சுமிபிரபா, லாரியை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் தருமாறு லாரி உரிமையாளர் குமாரிடம் கேட்டார். 
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத லாரி உரிமையாளர் குமார், இது குறித்து திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதனைதொடர்ந்து லஞ்ச ஓழிப்பு போலீசார் தாசில்தாரை கையும், களவுமாக பிடித்து கைது செய்ய முடிவு செய்தனர். 
தொலைபேசியில் தொடர்பு கொண்டார்
அதன்படி நேற்று காலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரைப்படி லாரி உரிமையாளர் குமார், தாசில்தார் லட்சுமி பிரபாவை தொலைபேசியில் தொடர்பு ெகாண்டு பணம் கொடுக்க விரும்புவதாக கூறினார். 
அப்போது அவரிடம் தாசில்தார் லட்சுமிபிரபா, தான் திருவாரூர் தலைமை தபால் நிலையத்தில் உள்ளதாகவும், அங்கு வந்து லஞ்ச பணத்தை கொடுக்குமாறும் கூறியுள்ளார். 
லஞ்ச பணத்தை கொடுத்தார்
இதனைத்ெதாடர்ந்து நேற்று காலை 11 மணியளவில் குமார், ரசாயன பவுடர் தடவிய ரூ.10 ஆயிரத்துடன் திருவாரூர் தலைமை தபால் நிலையத்துக்கு சென்றார். 
அப்போது அங்கு இருந்த தாசில்தாரின் ஜீப் டிரைவர் லெனின்(37) தனக்கும் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என கேட்டார். இதனால் லெனினிடம் ரூ.2 ஆயிரத்தை லாரி உரிமையாளர் குமார் கொடுத்தார். பின்னர் அங்கு இருந்த தாசில்தார் லட்சுமி பிரபாவிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.8 ஆயிரத்தை குமார் கொடுத்தார். 
கைது
லஞ்ச பணத்தை தாசில்தார் லட்சுமி பிரபா வாங்கியபோது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்ச பணத்துடன் தாசில்தார் லட்சுமி பிரபாவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரது வாகன டிரைவர் லெனினையும் கைது செய்தனர். 
கைது செய்யப்பட்ட தாசில்தார் லட்சுமிபிரபா மற்றும் அவரது ஜீப் டிரைவர் லெனின் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பரபரப்பு 
லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் அவரது டிரைவருடன் கைது செய்யப்பட்ட சம்பவம் திருவாரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்