வறுமையில் தத்தளிக்கும் கிராமிய பாடகர் குடும்பத்தினர்
கிராமிய பாடகர் தேக்கம்பட்டி சுந்தர்ராஜனின் குடும்பத்தினர் வறுமையில் தத்தளித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.;
ஆண்டிப்பட்டி:
தேக்கம்பட்டி சுந்தர்ராஜன்
சமீபத்தில் நடிகர் தனுஷ் நடித்த கர்ணன் படத்தின், கண்டா வரச்சொல்லுங்க என்ற சிங்கிள் டிராக் பாடல் வெளியாகியது.
சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் வெளியான இந்த பாடலுக்கு சொந்தகாரர் தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் ஆவார்.
கர்ணன் படத்தின் இந்த பாடலின் தொடக்கத்தில் நன்றி தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் என்று வாசகம் இடம்பெற்றிருந்தது. 400-க்கும் மேற்பட்ட கிராமிய பாடல்களை எழுதி பாடிய தேக்கம்பட்டி சுந்தர்ராஜன், கடந்த 2002ம் ஆண்டு இறந்து விட்டார்.
வறுமையில் தத்தளிப்பு
தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் இறந்தாலும், அவர் பாடிய பாடல்கள் பட்டி தொட்டிகள் எல்லாம் இன்றும் ஒலித்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், அவர் பாடிய 'அங்கே இடிமுழங்குது' என்ற பாடல் இன்றளவும் மக்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு கோவில் திருவிழாக்களிலும், தேக்கம்பட்டி சுந்தர்ராஜனின் பாடல்கள் கண்டிப்பாக இடம்பெறும். 400-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய தேக்கம்பட்டி சுந்தர்ராஜனின் குடும்பத்தினர் வறுமையில் தத்தளித்து கொண்டிருக்கின்றனர்.
தேக்கம்பட்டி சுந்தர்ராஜனுக்கு 6 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்கள் அனைவரும் கூலிவேலை செய்தே பிழைப்பு நடத்தி கொண்டிருக்கின்றனர்.
அவருடைய மனைவி சுப்புத்தாய், உடல்நலம் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத சூழ்நிலையில் மருந்து-மாத்திரைகள் சாப்பிட்டு வாழ்ந்து வருகிறார்.
உதவித்தொகை வழங்க கோரிக்கை
இதற்கிடையே தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் குடும்பத்தினர், தங்களுக்கு அரசு கலைஞர்களுக்கு வழங்கும் உதவித்தொகையை கொடுக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
முதியோருக்கு வழங்கப்படும் உதவித்தொகை மட்டுமே, தேக்கம்பட்டி சுந்தர்ராஜனின் மனைவிக்கு கிடைக்கிறது. அந்த பணத்தை வைத்து அவர், மருந்து-மாத்திரைகள் வாங்குவதாக பரிதாபமாக தெரிவித்தார்.
கிராமங்கள், நகரங்கள் என பட்டித்தொட்டியெல்லாம் தேக்கம்பட்டி சுந்தர்ராஜனின் பாடல்கள் ஒலித்தாலும் அவரது குடும்பத்தினர் வறுமையில் வாடிக்கொண்டிருக்கின்றனர்.
இவர்களின் வாழ்க்கையின் ஒளியேற்ற அரசு மற்றும் கலைத்துறையினர் முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.