தீவு சுற்றுலா படகு போக்குவரத்து தாமதம்

தீவு சுற்றுலா படகு போக்குவரத்து கிடப்பில் உள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Update: 2021-02-24 16:45 GMT
ராமேசுவரம், 
தீவு சுற்றுலா படகு போக்குவரத்து கிடப்பில் உள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சுற்றுலா படகு

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியான பாம்பன் குந்துகால் அருகே சிங்கிலித்தீவு, குருசடை தீவு மற்றும் மண்டபம் அருகே மனோலி தீவு, முயல் தீவு உள்ளிட்ட ஏழு தீவுகள் உள்ளன. இந்த ஏழு தீவுகளும் மண்டபம் வனச்சரக அலுவலக கட்டுப்பாட்டின்கீழ் வருகின்றன.
 பாம்பன் அருகே உள்ள குருசடை தீவு மற்றும் சிங்கலி தீவு பகுதிகளில் சுற்றுலா பயணிகள் சென்று வரும் வகையில் சுற்றுலா படகு போக்குவரத்து திட்டம் தொடங்குவதற்கு கடந்த 2 வருடத்திற்கு முன்பு மாவட்ட வனத்துறையால் முடிவு செய்யப்பட்டு அதற்காக புதுச்சேரியில் இருந்து புதிதாக செய்யப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சுமார் 4 பைபர் படகுகள் பாம்பன் குருசடை தீவு பகுதியில் கொண்டு வந்து இறக்கி வைக்கப்பட்டு இருந்தன.தீவு பகுதிக்கு சுற்றுலா படகு போக்குவரத்து தொடங்க மீனவர்கள் எதிர்ப்பை தொடர்ந்து அந்த திட்டமானது அப்போதைக்கு கிடப்பில் போடப்பட்டது.
நடவடிக்கை

இந்த நிலையில் பாம்பன் குந்துகால் அருகே உள்ள குருசடை தீவு மற்றும் சிங்கலிதீவு பகுதிக்கு சுற்றுலா படகு போக்குவரத்தை தொடங்கு வதற்கு 2 வருடத்தை கடந்தும் வனத்துறை அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமலும், மீனவர்களிடம் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தி சுற்றுலா படகு போக்குவரத்தை தொடங்கவும் நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து அந்த திட்டத்தை கிடப்பில் போட்டு வைத்துள்ளனர்.
இதனால் பல லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்டு வந்த பைபர் படகுகள் வெறும் காட்சிப் பொருளாகவே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதனால் பாம்பன் குந்துகால் வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சுற்றுலா படகில் சென்று கடல் மற்றும் தீவின் அழகை பார்த்து ரசிக்க முடியாமல் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். 
கோரிக்கை

எனவே இதுகுறித்து மாவட்ட வன உயிரின காப்பாளர் மற்றும் மாவட்ட வனத்துறை அதிகாரிகளும் பாம்பன் அருகே உள்ள குருசடை தீவு மற்றும் சிங்கலி தீவு பகுதியில் சுற்றுலா படகு போக்குவரத்தை விரைந்து தொடங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் சுற்றுலா ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏர்வாடி அருகே நடுக்கடலில் உள்ள மணல் திட்டு வரையிலும் வனத்துறையால் சுற்றுலா படகு போக்குவரத்து, தொண்டி அருகே காரங்காடு பகுதியில் சுற்றுலா படகு போக்குவரத்து தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்