தமிழகம்-புதுவையில் பா.ஜனதாவை வீழ்த்துவோம்

தமிழகம், புதுவையில் பாரதீய ஜனதாவை வீழ்த்துவோம் என்று தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார்.;

Update: 2021-02-24 16:42 GMT
புதுச்சேரி, பிப்.24-
தமிழகம், புதுவையில் பாரதீய ஜனதாவை வீழ்த்துவோம் என்று  தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார். 
கண்டன ஆர்ப்பாட்டம் 
புதுவையில் அண்ணா சிலை அருகே காங்கிரஸ் சார்பில் இன்று நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி அமைப்பாளர் தொல்.திருமாவளவன் எம்.பி. பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தலைமை தாங்கி நாராயணசாமி வெற்றிகரமாக நடத்தியுள்ளார். இந்தியாவில் பல மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்த பா.ஜ.க. புதுவையிலும் ஆட்சியை கவிழ்த்துள்ளது. அவர்கள் அநாகரீக அரசியலை அரங்கேற்றி உள்ளனர்.
கொரோனாவைவிட கொடியது 
நமது நாட்டை பிடித்திருக்கும் பெரும் தீங்கு பாரதீய ஜனதா. கொரோனாவை விட அது கொடியது. புதுவையில் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சி கவிழ்ப்பினை செய்துள்ளனர். ஒரு வகையில் காங்கிரசுக்கு பா.ஜ.க. நல்லதையே செய்துள்ளது. வரும் தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணிக்கு புதுவை மக்கள் வாக்களிப்பார்கள்.
மக்களுக்கு நாராயணசாமி என்ன துரோகம் செய்தார்? அவரது ஆட்சியை ஏன் கவிழ்த்தார்கள்? தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு நல திட்டங்களை கொண்டுவந்தது துரோகமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைக்க இவர்கள் யார்? என்.ஆர்.காங்கிரசாரின் முகத்தில் இப்போதுதான் வெளிச்சம் வந்துள்ளது. அவர்கள் யார்? என்பது இப்போது தெரியவந்துள்ளது.
அடாவடி அரசியல்
பா.ஜ.க.வின் அடாவடி அரசியலுக்கு என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. துணை போய் உள்ளது. அவர்களையும் ராஜினாமா செய்தவர்களையும் ஓட்டுக்கேட்க வரும்போது விரட்டியடிக்க வேண்டும். காங்கிரஸ் கூட்டணிக்கு செய்த துரோகத்தைவிட மக்களுக்கு அவர்கள் மாபெரும் துரோகத்தை இழைத்துள்ளனர்.
பா.ஜ.க. விரித்த வலையில் 5, 6 பேர் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு அரசியல் எதிர்காலமே இல்லாமல் செய்யவேண்டும். நாட்டின் ஜனநாயகத்தை பா.ஜ.க. சிதைத்துக்கொண்டுள்ளது. சாதி வெறியை தூண்டுகிறது. எதையும் செய்வோம். எங்களை யார் என்ன செய்ய முடியும்? என்று செயல்படுகிறார்கள்.
விரட்டியடிப்போம் 
புதுவை அரசை கலைத்திருப்பதன் மூலம் தமிழக மக்களுக்கும் சிக்னல் கொடுத்திருப்பதாக நாங்கள் பார்க்கிறோம். தமிழகத்தில் தி.மு.க. அரசு அமைந்தால் அதனையும் கலைக்க முடியும் என எச்சரிக்கும் ஒத்திகை போல இதை பார்க்கிறோம். ஆனால் தமிழகத்தில் அவர்களது முயற்சி, கனவு பலிக்காது. தமிழகத்தில் பா.ஜ.க.வை விரட்டியடிப்போம்.
தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றிபெறும். இந்த கூட்டணி அரசியல் கூட்டணி அல்ல. சமூக நீதியை, ஜனநாயகத்தை காப்பாற்ற, இந்திய நாட்டை காப்பற்ற வேண்டும் என்று அமைக்கப்பட்ட கூட்டணி. இப்போது ஆட்சியை நாராயணசாமி பறிகொடுத்திருக்கலாம். ஆனால் மிகப்பெரும் வெற்றியை வரும் தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி பெறும். தமிழகம், புதுவையில் பா.ஜ.க.வை வீழ்த்தி அவர்களின் முகத்தில் கரி பூசுவோம்.
இவ்வாறு அவர் பேசினார். 

மேலும் செய்திகள்