போலி வாக்காளர் அட்டை மூலம் பத்திரப்பதிவு செய்து ரூ.1½ கோடி நிலம் அபகரிப்பு சென்னையில் 2 பேர் கைது

போலி வாக்காளர் அட்டை மூலம் பத்திரப்பதிவு செய்து ரூ.1½ கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்து வீடு கட்ட முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2021-02-24 15:42 GMT
சென்னை, 

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 52). இவர் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

எனக்கும், எனது மனைவி பாக்யலட்சுமிக்கும் சொந்தமான ரூ.1½ கோடி மதிப்புள்ள காலி மனை நிலம் பள்ளிக்கரணை, காமகோட்டி நகர், 7-வது மெயின் ரோட்டில் உள்ளது. திடீரென்று அந்த நிலத்தில் வீடு கட்ட சிலர் முயற்சித்தனர்.

அது பற்றி விசாரித்த போது, பள்ளிக்கரணையைச் சேர்ந்த கிரிபிரசாத் (40) என்பவர் ரகு, குமரேசன் மற்றும் மோகனா ஆகியோருடன் சேர்ந்து போலியான வாக்காளர் அட்டை தயாரித்து போலி ஆவணங்கள் மூலம் மேற்படி எங்களுக்கு சொந்தமான நிலத்தை அபகரித்து, கட்டுமான நிறுவனம் ஒன்றின் மூலம் அதில் வீடு கட்ட முயற்சி மேற்கொண்டது தெரிய வந்தது.

2 பேர் கைது

மேற்படி நிலத்திற்கு, அவர்கள் பெயரில் பொது அதிகார பத்திரம் கொடுத்தது போல, போலியாக சைதாப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து, நிலத்தை அபகரித்து விட்டனர்.

இந்த மோசடி நபர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து, எங்களது நிலத்தை மீட்டுத்தர வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கமிஷனர் உத்தரவிட்டதன் பேரில், மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தனலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மோசடி நபர்கள் கிரிபிரசாத், ரகு (47) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். போலி வாக்காளர் அட்டை தயாரித்தது எப்படி? என்பது பற்றி விசாரணை நடக்கிறது.

மேலும் செய்திகள்