தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
கொலை வழக்கு
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள தீப்பாச்சி நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்த ராஜகோபால் மகன் முருகவேல் (வயது 39). இவர் ஏரல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலுவை, லோடு ஆட்டோவை ஏற்றி கொலை செய்த வழக்கில் ஏரல் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இதே போன்று மேல்மாந்தையை சேர்ந்த கருப்பசாமி மகன் மாடசாமி (65) என்பவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததாக சூரங்குடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். சாத்தான்குளம் செம்பன்குடியிருப்பை சேர்ந்த ஆறுமுகம் மகன் சின்னத்துரை (29) என்பவர் மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சாத்தான்குளம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஸ்ரீவைகுண்டம் வெள்ளூர் மேலத்தெருவை சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் கந்தசாமி என்ற கண்ணன் என்பவர் செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் செய்துங்கநல்லூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
குண்டர் தடுப்பு சட்டம்
இவர்கள் 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் கி.செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், முருகவேல், மாடசாமி, சின்னத்துரை, கந்தசாமி என்ற கண்ணன் ஆகிய 4 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர்.