வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கக்கோரி திருமருகலில், மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்
வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கக்கோரி திருமருகலில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;
திட்டச்சேரி:-
வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கக்கோரி திருமருகலில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
நாகை மாவட்டம் திருமருகல் பஸ் நிலையம் எதிரில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் குறைந்த அளவு பாதிப்புள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்குவது போல் தமிழகத்திலும் வழங்க வேண்டும், முழு அளவில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும்.
இட ஒதுக்கீடு
தனியார் துறைகளில் வேலை வாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
போராட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகள் சங்க ஒன்றியக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றியக்குழு உறுப்பினர் லெனின், மாற்றுத்திறனாளிகள் சங்க ஒன்றிய பொருளாளர் தவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றியக்குழு உறுப்பினர் காரல்மார்க்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மறியல் காரணமாக அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
வேதாரண்யம்
அதேபோல் வேதாரண்யம் வடக்கு வீதியில் சங்க தலைவர் சிக்கந்தர் தலைமையில் மறியலில் ஈடுபட முயன்றனர். இதை அறிந்த போலீசார் அங்கு சென்று மாற்றுத்திறனாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் சாலையோரம் தங்கள் இருசக்கர வாகனத்தில் அமர்ந்தபடி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இந்த போராட்டம் 2 மணி நேரம் நீடித்தது.