கிராம சுகாதார செவிலியர்கள் வேலைநிறுத்தம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரியில் கிராம சுகாதார செவிலியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-02-24 13:53 GMT
ஊட்டி,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தமிழக பொதுத்துறை ஊழியர்களுக்கு வழங்குவது போல தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்பட 

34 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஊழியர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நீலகிரி மாவட்டத்தில் ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டம் நடந்தது.

ஊட்டி ஏ.டி.சி.யில் கிராம சுகாதார செவிலியர்கள் பணிக்கு செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோவிந்தம்மாள் தலைமை தாங்கினார்.

காலி பணியிடங்கள்
சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் வருவாய் கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்து அடிப்படை ஊதியம் ரூ.15,700 என வழங்க வேண்டும். 

கட்டணமில்லா சிகிச்சை முறையை உத்தரவாதபடுத்த புதிய நல்வாழ்வு காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்.
 காலி பணியிடங்கள் அனைத்தையும் முறையான காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும்.

கிராம சுகாதார செவிலியர்களை நுழைவு நிலையில் கிரேடு-2 என்றும், 5 ஆண்டு பணி முடித்தவர்களை கிரேடு-1 என்றும் வகைப்படுத்தி ஊதியம் நிர்ணயத்தை முன் தேதியிட்டு வழங்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் கிராம சுகாதார செவிலியர்கள் 250 பேர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது மற்றும் இதர பணிகள் பாதிக்கப்பட்டன.

இதேபோல் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 8-வது நாளாக வேலைநிறுத்தம் நடந்தது.

மேலும் செய்திகள்