வேன் திருடிய வாலிபர் சிக்கினார்
வேன் திருடிய வாலிபர் போலீசாரிடம் சிக்கினார்
ரிஷிவந்தியம்,
சென்னை கொளத்தூர் பகுதியில் ராஜா என்பவருக்கு சொந்தமான சுற்றலா வேனை மர்மநபர் ஒருவர் திருடிச்சென்றார். இது குறித்த புகாரின் பேரில் சென்னை கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் திருடப்பட்ட வேன் பகண்டை கூட்டுரோட்டில் டீசல் இல்லாமல் நின்று கொண்டிருந்தது. இதனிடையே வேன் திருடப்பட்டது தொடர்பான விவரம் டிரைவர்கள் வாட்ஸ்-அப் குரூப்பில் வைரலாக பரவியது. இதன்மூலம் பகண்டை கூட்டுரோட்டில் நிற்பது ராஜாவுக்கு சொந்தமான வேன் என்பது அப்பகுதி டிரைவர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து வேனில் வந்தவரை அப்பகுதி டிரைவர்கள் பிடித்து பகண்டைகூட்டுரோடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து பிடிபட்டவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ராஜேஷ் மகன் ரவி (வயது 30) என்பதும், அவர் ராஜாவுக்கு சொந்தமான வேனை திருடிக்கொண்டு வந்ததும் தெரிந்தது. இதையடுத்து அவரை சென்னை கொளத்தூர் போலீசாரிடம் பகண்டைகூட்டுரோடு போலீசார் ஒப்படைத்தனர். மேலும் வேனும் மீட்கப்பட்டது.