மத்திய அரசின் உதவித்தொகைக்கான தேர்வை 3,012 மாணவ - மாணவிகள் எழுதினர்
மத்திய அரசின் உதவித்தொகை பெறுவதற்கான தேர்வை பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் 3,012 மாணவ, மாணவிகள் எழுதினர். 125 பேர் தேர்வு எழுத வரவில்லை.;
அாியலூர்:
26 மையங்களில்...
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்காக மத்திய அரசு நடத்தும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி தொகை வழங்கப்படுகிறது. இதற்கான தேர்வு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பெரம்பலூர் மாவட்டத்தில் 11 மையங்களிலும், அரியலூர் மாவட்டத்தில் 15 மையங்களிலும் நேற்று நடந்தது.
இதில் காலை 9.30 மணி முதல் 11 மணி வரை 90 மதிப்பெண்களுக்கு மனத்திறன் தேர்வாகவும், பின்னர் அரை மணி நேர இடைவேளிக்கு பிறகு காலை 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரை படிப்பறிவு தேர்வாகவும் என 2 கட்டமாக மாணவ, மாணவிகளுக்கு இந்த தேர்வு நடந்தது.
கல்வி உதவித்தொகை
இந்த தேர்வினை எழுத பெரம்பலூர் மாவட்டத்தில் 436 மாணவர்களும், 866 மாணவிகளும், அரியலூர் மாவட்டத்தில் 647 மாணவர்களும், 1,188 மாணவிகளும் என மொத்தம் 3,137 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் 420 மாணவர்களும், 832 மாணவிகளும், அரியலூர் மாவட்டத்தில் 606 மாணவர்களும், 1,154 மாணவிகளும் என மொத்தம் 3,012 பேர் தேர்வு எழுத வந்திருந்தனர். 125 பேர் தேர்வு எழுத வரவில்லை.
இந்த தேர்வில் மாவட்டங்களில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ-மாணவிகளுக்கு, 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 படிக்கும் வரை மாதந்தோறும் கல்வி உதவித்தொகையாக ஆயிரம் ரூபாய் மத்திய அரசால், அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.