தரைப்பாலம் உடைந்து துண்டிக்கப்பட்ட சாலையை சீரமைக்க கோரிக்கை
தரைப்பாலம் உடைந்து துண்டிக்கப்பட்ட சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீன்சுருட்டி:
சாலை துண்டிப்பு
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள குண்டவெளி கிராமத்தில் இருந்து வெத்தியார்வெட்டு கிராமத்திற்கு செல்ல தார் சாலை உள்ளது. இந்த சாலையானது அளவேரி வழியாக சத்திரம், வெத்தியார்வெட்டு மற்றும் சலுப்பை ஆகிய கிராமங்களுக்கு செல்கிறது. இந்த கிராமத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த சாலை வழியாகவே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று படித்து வந்தனர். இந்த சாலையின் இடையே ஏரியில் இருந்து தண்ணீர் செல்வதற்காக குழாய்கள் பதிக்கப்பட்டு, தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த மாதம் பெய்த கனமழையின் காரணமாக இந்த சாலையையொட்டி உள்ள பெரிய ஏரியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியபோது, தரைப்பாலம் உடைந்து சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் இந்த சாலையை பயன்படுத்தி வந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் தற்போது 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றி ஆலத்திப்பள்ளம் கிராமம் வழியாக சென்று வருவதால், சரியான நேரத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பொதுமக்களும் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியவில்லை.
வாகனங்கள் செல்ல முடியவில்லை
அவசர காலங்களில் கூட இந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. சத்திரம், வெத்தியார்வெட்டு மற்றும் சலுப்பை கிராமத்தில் இருந்து இந்த சாலை வழியாக வரும் முதியவர்கள், தரைப்பாலம் உடைந்து சாலை துண்டிப்பால் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் நிலை தடுமாறி விழுந்து காயமடையும் நிலை உள்ளது. மேலும் இந்த வழியாக இருசக்கர வாகனம், ஆட்டோ, கார் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே இந்த சாலையில் தரைப்பாலம் அமைத்து சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.