கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் 33 அடியாக குறைந்தது

கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 33 அடியாக குறைந்தது. இருந்தபோதிலும் கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2021-02-21 17:22 GMT
கோவை,

கேரள வனப்பகுதியில் சிறுவாணி அணை உள்ளது. 50 அடி உயரம் கொண்ட இந்த அணை மூலம் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 26 வார்டுகள் மட்டுமின்றி வழியோரங்களில் உள்ள கிராமங்களுக்கும் குடிநீர்  வழங்கப்பட்டு வருகிறது. 

கடந்த ஆண்டு பெய்த பருவமழை காரணமாக சிறுவாணி அணை நிரம்பியது.  கடந்த சில வாரங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லை. மேலும் இந்த அணையில் இருந்து தினமும் 82 எம்.எல்.டி. (8 கோடியே 20 லட்சம் லிட்டர்) குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது.

 இதனால் அணையின் நீர்மட்டும் குறைந்து வருகிறது. தற்போது அணையில் 33 அடிக்கு தண்ணீர் உள்ளது.  இதுகுறித்து மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

தட்டுப்பாடு ஏற்படாது

சிறுவாணி அணை 50 அடி உயரம் கொண்டது என்றாலும், தற்போது கேரள அரசு இந்த அணையில் 45 அடி உயரம் வரை மட்டுமே தண்ணீர் தேக்க அனுமதி அளித்து உள்ளது. கடந்த மாதத்திலும் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது.

இதனால் அணையில் இருந்து குடிநீருக்காக கூடுதல் அளவு தண்ணீர் எடுக்கப்பட்டதால் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. தற்போது 33 அடி தண்ணீர் உள்ளதால், கோடை காலத்தில் மாநகராட்சி பகுதிகளுக்கு போதுமான குடிநீர் வழங்க முடியும். குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

மேலும் செய்திகள்