தடகள போட்டியில் மாநில அளவில் மாணவி சாதனை

தடகள போட்டியில் மாநில அளவில் மாணவி சாதனை படைத்துள்ளார்;

Update: 2021-02-21 16:51 GMT
காரைக்குடி, 
தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கம் நடத்திய மாநில அளவிலான தடகள போட்டி கோயம்புத்தூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் காரைக்குடி அருகே அமராவதிப் புதூரில் உள்ள ராஜராஜன், மகளிர் கல்வியியல் கல்லூரியில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்த மாற்றுத் திறனாளி மாணவி ஷர்மிளா கலந்து கொண்டார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 20-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்துகொண்ட பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடமும் குண்டு எறிதல் போட்டியில் 2-வது இடமும் பெற்று தங்கப் பதக்கம், வெள்ளிப்பதக்கம் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தார். இவர் ஏற்கனவே 2019-ல் மாநில அளவில் நடைபெற்ற குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதல் போட்டியில் 2 தங்க பதக்கங்களும் ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளி பதக்கமும் 2020-ல் நடைபெற்ற 100 மீட்டர், 200 மீட்டர் நடை போட்டி  மற்றும் குண்டு எறிதலில் 3 தங்கப் பதக்கங்களையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை புரிந்த மாணவி சர்மிளாவை ராஜராஜன் மகளிர் கல்வியியல் கல்லூரியின் ஆலோசகரும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருமான டாக்டர் சுப்பையா பாராட்டி ரூ. 10 ஆயிரம் பரிசு வழங்கினார். மேலும் ராஜராஜன் மகளிர் கல்வியியல் கல்லூரி முதல்வர் சிவக்குமார், பேராசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் அனைவரும் மாணவி ஷர்மிளாவை பாராட்டினர்.

மேலும் செய்திகள்