திருமுருகன்பூண்டி திருமுருகநாதசாமி கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
திருமுருகன்பூண்டி திருமுருகநாதசாமி கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அனுப்பர்பாளையம்,
திருமுருகன்பூண்டி திருமுருகநாதசாமி கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருமுருகநாதசாமி கோவில்
திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டியில் பிரசித்தி பெற்ற திருமுருகநாதசாமி கோவில் உள்ளது. ஆண்டுதோறும் மாசி மாதம் இந்த கோவிலில் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருமுருகநாதசாமி கோவில் மாசிமாத தேர்த்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி இன்று (திங்கட்கிழமை) மாலை சூரிய, சந்திர மண்டல காட்சிகள், நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை பூதவாகன, சிம்ம வாகன காட்சிகள் நடைபெறுகிறது. 24-ந்தேதி இரவு புஷ்ப விமான காட்சி, 25-ந்தேதி இரவு பஞ்ச மூர்த்திகளுடன் ரிஷப வாகன காட்சி, 26-ந்தேதி திருக்கல்யாணம் மற்றும் யானை வாகன, அன்ன வாகன காட்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், தினமும் பல்வேறு சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது.
தேரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 27-ந்தேதி மதியம் 2 மணிக்கு நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர். 28-ந்தேதி மாலை கோவில் வளாகத்தில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்பத் திருவிழா விமரிசையாக நடைபெற உள்ளது. அடுத்த மாதம் (மார்ச்) 1-ந்தேதி சுந்தரர் வேடுபறி திருவிழாவும், 2-ந்தேதி பிரம்மதாண்டவ தரிசன காட்சியும், 3-ந்தேதி காலை மஞ்சள் நீராட்டு விழாவுடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கங்காதரன் தலைமையில் கோவில் அர்ச்சகர்கள், ஊழியர்கள் மற்றும் திருமுருகன்பூண்டி பேரூராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.
கொடியேற்ற நிகழ்ச்சியில் சுப்பிரமணியர்-வள்ளி, தெய்வாணை, சோமாஸ்கந்தர்-அம்பாள், விநாயகர் ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் சிவாச்சாரியார்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் செயல் அலுவலர் கங்காதரன், தக்கார் பெரிய மருது பாண்டியன் உள்பட பக்தர்கள், கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர். கொரோனா பரவல் காரணமாக குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.