காட்சிப்பொருளாக நிற்கும் பேட்டரிகார்
ரெயில் நிலையத்தில் காட்சிப்பொருளாக பேட்டரி கார் நிற்கிறது
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் ரெயில் நிலையத்திற்கு தினமும் அதிக அளவில் பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பயணிகளில் நீண்ட நடைபாதையில் நடக்க முடியாத முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் தங்கள் பொருட்களுடன் எளிதாக நடைமேடையில் சென்று ரெயில் பெட்டி அருகிலேயே இறங்கிக்கொள்ளும் வகையில் ரெயில்வே நிர்வாகம் சார்பில் ரூ.பல லட்சம் மதிப்பிலான நவீன பேட்டரி காரை வழங்கி உள்ளது. ஆனால் இந்த பேட்டரி காரை ரெயில் நிலைய அதிகாரிகள் ஒரு நாள் கூட உபயோகப்படுத்தாமல் அப்படியே கிடப்பில் போட்டு வைத்துள்ளனர்.பல மாதங்களாக காட்சிப்பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டதால் டயர்களில் காற்று இறங்கி நிற்கிறது. இதை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வராவிட்டால் பேட்டரியும் செயல் இழந்து இதற்காக செலவழிக்கப்பட்ட மக்கள் பணம் ரூ. பல லட்சம் வீணாகி விடும். எனவே இதுகுறித்து ரெயில்வே துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து வீணாகி வரும் பேட்டரி காரை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.