ஆழியூர்-திருக்கண்ணங்குடி சாலையில் உள்ள பழுதடைந்த பழையனூர் தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும்

ஆழியூர்-திருக்கண்ணங்குடி சாலையில் உள்ள பழுதடைந்த பழையனூர் தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என கீழ்வேளூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2021-02-21 15:18 GMT
சிக்கல்,

கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கூட்டம் தலைவர் வாசுகி நாகராஜன் தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய ஆணையர் மீனா, வட்டார வளர்ச்சி அலுவலர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

கண்ணன் (தி.மு.க.):- தேவூர் ஊராட்சியில் பள்ளிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ள முக்கிய சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. அதனை சீர் செய்ய வேண்டும்.

சேதமடைந்த தரைப்பாலம்

தேன்மொழி(அ.தி.மு.க.):- அகரகடம்பனூர் ஊராட்சிக்குட்பட்ட புத்தர்மங்கலம், ஆலக்கரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளையும், தார்சாலைகளாகவும், கோவில் கடம்பனூர் ஆற்றங்கரை மயான சாலையை சீரமைக்க வேண்டும். ஆழியூர்-திருக்கண்ணங்குடி சாலையில் உள்ள பழையனூர் வாய்க்கால் பாலம் சேதமடைந்துள்ளது. இதுகுறித்து கடந்த 17-ந்தேதி ‘தினத்தந்தி’ நாளிதழில் செய்தி வந்துள்ளது. எனவே அந்த பாலத்தை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருணாநிதி (தி.மு.க.):- வடகரை, கோகூர் பகுதிகளில் இருந்து தினமும் மாணவர்கள் கீழ்வேளூரில் உள்ள பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.

தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டதால் முன்பு திருவாரூரில் இருந்து கீழ்வேளூர், வடகரை வழியாக நாகைக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்சை மீண்டு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உயர்மின் கோபுர விளக்கு

இல்முன்னிசா (தி.மு.க.):- நீலப்பாடி கடைத்தெருவில் உயர் மின் கோபுர விளக்கு அமைக்க வேண்டும்.

ஒன்றியக்குழு துணை தலைவர் (புருஷோத்தமதாஸ்):- ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பதவி ஏற்று 14 மாதங்கள் ஆகியும், எங்கள் பகுதியில் எந்தவித பணிகளும் செய்யமுடியவில்லை.. 38 பஞ்சாயத்துகளில் சாலை வசதிகள் மிகவும் மோசமாக உள்ளது.

ரெங்கா (தி.மு.க) வண்டலூர்- செம்பியன்மகாதேவி சாலை மோசமாக உள்ளது. ஊராட்சிக்கு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது. இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பாலையா, வாசுகி, ரேவதி, அலுவலக மேலாளர் ராஜகோபால், மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்