ரவீந்திரநாத் எம்.பி. நடந்து சென்று ஆய்வு

தேவாரம்-சாக்குலூத்து மெட்டு சாலையை ரவீந்திரநாத் எம்.பி. நடந்து சென்று ஆய்வு;

Update: 2021-02-21 15:16 GMT

உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் தேவாரத்தில் இருந்து கேரள மாநிலம் சாக்குலூத்து மெட்டுக்கு சுமார் 7 கிலோமீட்டர் பாதை உள்ளது. 

இதில் தேவாரம் மீனாட்சிபுரத்தில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரம் சாலை அமைக்கப்பட்டுள்ளது. 

மீதமுள்ள 4.கிலோமீட்டர் அடர்ந்த வனப்பகுதி என்று கூறி வனத்துறை அனுமதி மறுத்துவருகிறது. 


இதனால் இத்திட்டம் கடந்த பல வருடங்களாக கிடப்பில் ேபாடப்பட்டது. தேவாரம் பகுதியில் இருந்து கேரள மாநிலத்துக்கு ஏலக்காய் தோட்ட வேலைக்கு கூலித்தொழிலாளர்கள் சாக்குலூத்து மெட்டு வழியாகத்தான் நடந்து செல்கின்றனர். 

இந்த நிலையில் தேனி எம்.பி.ரவீந்திரநாத், கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன் ஆகியோர் சாக்குலூத்து மெட்டுக்கு வந்தனர். 


பின்னர் அவர்கள் சாக்குலூத்து மெட்டு சாலையில் சுமார் 1 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று சாலை அமைக்கப்பட உள்ள பகுதிகளை ஆய்வு செய்தார். பின்னர் ரவீந்திரநாத் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-


சாக்குலூத்து மெட்டு சாலையில் மீதமுள்ள 4 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்க வனத்துறை அனுமதி அளிக்க வேண்டும். 

இந்த சாலை மூலம் தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ஏலக்காய்தோட்ட விவசாயிகள் சென்று வர ஏதுவாக இருக்கும். தமிழக- கேரள மக்கள் போக்குவரத்து அதிகரிக்கும். 

மேலும் ஏலக்காய் வர்த்தகமும் அதிகரிக்கும். பல்வேறு முக்கியத்துவம் பெற்ற இந்த சாலையை விரைவில் அமைக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளேன்.

 விரைவில் மத்திய, மாநில அரசுகளின் அனுமதியோடு சாலை அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

அப்போது, தேனி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சையதுகான், உத்தமபாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர் கதிரேசன், உத்தமபாளையம் ஒன்றியக்குழு தலைவர் ஜான்சி வாஞ்சிநாதன், துணைத் தலைவர் மூக்கம்மாள் கெப்புராஜ், தேவாரம் பேரூர் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்