அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்குவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளியில் அனைத்து சமுதாய மக்கள் சார்பில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு பாராட்டு விழா நடந்தது. நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஏ.பி.கே.பழனிசெல்வம் தலைமை தாங்கினார்.
பசும்பொன் தேவர் கல்வி அறக்கட்டளை தலைவர் எம்.பரமசிவம் முன்னிலை வகித்தார். நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளி செயலாளர் வக்கீல் ரத்தினராஜா வரவேற்று பேசினார்.
நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஏ.பி.கே.பழனிசெல்வம், பசும்பொன் தேவர் கல்வி அறக்கட்டளை தலைவர் எம்.பரமசிவம் ஆகியோர் குபேரன் சிலையை அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு நினைவு பரிசாக வழங்கினர். யோகீசுவரர் சங்க தலைவர் கே.டி.ஆனந்த் வெற்றிவேல் பரிசளித்தார்.
பொதுநல மருத்துவமனை தலைவர் டி.கே.டி.திலகரத்தினம், டாக்டர் என்.டி.சீனிவாசன், மகாலட்சுமி அறக்கட்டளை தலைவர் கே.சந்திரசேகர் உள்ளிட்டவர்கள் வாழ்த்தி பேசினர்.
பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஏற்புரை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
புதிய மாவட்டம்
கோவில்பட்டி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக யாரை அறிவித்தாலும் வெற்றி நிச்சயம். அந்தளவுக்கு தொகுதியில் ஏராளமான நலத்திட்ட பணிகளை செய்துள்ளோம். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எளிமையானவர். அவரை முன் அனுமதியின்றி அ.தி.மு.க. தொண்டர்கள் எப்போதும் சந்திக்கலாம்.
முன்பு கோவில்பட்டி தொகுதியில் கம்யூனிஸ்டு கட்சியினர் 7 முறை வென்றாலும் ஓரளவுக்குதான் நலத்திட்ட பணிகளை செய்ய முடிந்தது. தாமிரபரணி ஆற்றை வைப்பாற்றுடன் இணைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து பம்பை ஆறும், வைப்பாறும் இணைக்கப்படும்.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்குவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். கோவில்பட்டி யூனியனுடன் 12 பஞ்சாயத்துகளை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் விரைவில் நிறைவேறும்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆட்சி நீடிக்காது என்று சிலர் கருதினர். ஆனால் மக்கள் ஆதரவுடன் அ.தி.மு.க. அரசு வெற்றிநடை போடுகிறது. கோவில்பட்டி தொகுதி மக்களின் சகோதரனாக என்றும் இருப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் சில்லாங்குளம் முத்துக்கருப்பன் நினைவு கல்வி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் கே.பாலமுருகன், கம்மவார் சங்க தலைவர் எஸ்.வெங்கடேஷ் சென்னகேசவன், ரீஜெண்ட் அதிபர் எஸ்.ஹரிபாலகன், தேவர் மகாஜன சங்க தலைவர் எ.சுப்பையா, இல்லத்து பிள்ளைமார் சங்க தலைவர் எம்.சண்முகசுந்தரம், வணிக வைசிய சங்கம் வெங்கடேஷ், சேனை தலைவர் சங்க தலைவர் எ.சண்முகவேல், யோகீசுவரர் சங்க தலைவர் கே.டி.ஆனந்த், சலவை தொழிலாளர் சங்க தலைவர்கள் கருப்பசாமி, ரத்தினம், அய்யாத்துரை,
தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநில பொருளாளர் அய்யாத்துரை பாண்டியன், வேலாயுதபுரம் நாடார் உறவின்முறை சங்க தலைவர் எஸ்.வேல்முருகேசன், அம்பேத்கர் மக்கள் இயக்க தலைவர் நெப்போலியன் மற்றும் பலர் பேசினர். தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சைவ வேளாளர் சங்க தலைவர் எஸ்.தெய்வேந்திரன் நன்றி கூறினார்.