லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி குணமான தந்தையை அழைத்து வர ஆஸ்பத்திரிக்கு சென்ற போது நேர்ந்த சோகம்

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமான தந்தையை அழைத்து வர சென்ற போது, லாரி மோதி வாலிபர் பரிதாபமாக பலியானார்.;

Update: 2021-02-21 10:08 GMT
பூந்தமல்லி, 

வளசரவாக்கம், திருநகர் அனெக்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா. இவருக்கு கடந்த சில தினங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டதால் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவரது மகன் அசோக்குமார் (வயது 21) என்பவர் தந்தையை அருகில் இருந்து பார்த்து கொண்டார்.

இந்த நிலையில்,சிகிச்சை முடிந்த தனது தந்தையை ஆஸ்பத்திரியிலிருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்து வீட்டிற்கு அழைத்து வருவதற்காக நேற்று அசோக்குமார் மற்றும் அவரது நண்பர் சசிகுமார் ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். பூந்தமல்லி அடுத்த பாப்பான்சத்திரம் அருகே சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றனர்.

அப்போது, மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில், இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர். இருவரையும் அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு, தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர்.

வாலிபர் பலி

அங்கு சிகிச்சை பலனின்றி அசோக்குமார் பரிதாபமாக இறந்து போனார். சசிகுமார் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் இறந்து போன அசோக்குமார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு அனுப்பி வைத்து லாரி டிரைவர் தமிழரசன் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தந்தையை டிஸ்சார்ஜ் செய்து அழைத்து வர சென்ற மகன் விபத்தில் சிக்கி இறந்து போன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்