தா.பேட்டை அருகே பரபரப்பு அரசு பள்ளி ஆசிரியையின் கணவர் மர்மச்சாவு கொலையா? போலீசார் விசாரணை
தா.பேட்டை அருகே அரசு பள்ளி ஆசிரியையின் கணவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தா.பேட்டை,
தா.பேட்டை அருகே அரசு பள்ளி ஆசிரியையின் கணவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
அரசு பள்ளி ஆசிரியை
திருச்சி மாவட்டம் தா.பேட்டை வடுகர் தெருவில் வசித்து வந்தவர் பழனிவேல் (வயது 41). இவர் துறையூரில் உள்ள தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். இவரது மனைவி மோகனாம்பாள் (38). தா.பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக வேலைபார்த்து வருகிறார்.
இவர்களின் மகன் சுஜித் (15). மகள் ரித்திகா (10). பழனிவேல் தினமும் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்காக துறையூருக்கு சென்றுவருவது வழக்கம். அதுபோல் நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற பழனிவேல் இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் மோகனாம்பாள் தனது கணவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார்.
மர்மச்சாவு
அப்போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக கூறியது. இதனால் பதறிய அவர், தனது கணவருடன் வேலை பார்க்கும் ராஜா என்பவரிடம் விசாரித்துள்ளார்.
இந்தநிலையில் துறையூரில் இருந்து தா.பேட்டை செல்லும் சாலையில் தேவரப்பம்பட்டி வனப்பகுதியில் சாலையோரத்தில் பழனிவேல் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்து மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்த ஜெம்புநாதபுரம் போலீசார் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு பழனிவேலின் முகம், கைகளில் கீறப்பட்டு இருந்தன. வயிற்றின் இடது பக்கத்தில் ரத்தக்காயமும் இருந்துள்ளது.
கொலையா?
அவர் மோட்டார் சைக்கிளில் வந்த போது கீழே விழுந்து இறந்தாரா? அல்லது யாராவது அவரை வழிமறித்து கொலை செய்தனரா? என்று தெரியவில்லை. இதையடுத்து பழனிவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிவேல் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.