புஞ்சைபுளியம்பட்டி அருகே, 2-வது நாளாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை

புஞ்சைபுளியம்பட்டி அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் 2-வது நாளாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-02-20 21:19 GMT
புஞ்சைபுளியம்பட்டி அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் 2-வது நாளாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 
புதிதாக டாஸ்மாக் கடை
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள ஏரப்பநாயக்கன்பாளையம் ஜல்லி தோட்டம் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த கடையை குள்ளேகவுண்டன்புதூர் ரோட்டில் உள்ள புதிய கட்டிடத்தில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. 
இதைத்தொடர்ந்து அந்த கடையில் இருந்த மதுபான பாட்டில்கள் அடங்கிய பெட்டிகளை லாரிகளில் கொண்டு சென்று குள்ளேகவுண்டன்புதூர் ரோட்டில் உள்ள புதிய கடையில் டாஸ்மாக் கடை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வைத்தனர். 
பொதுமக்கள் எதிர்ப்பு
இந்த நிலையில் குள்ளேகவுண்டன் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கப்பட உள்ளது என்ற தகவல் பரவியது. இதுபற்றி அறிந்ததும் விண்ணப்பள்ளி, வாலிபாளையம் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு குள்ளேகவுண்டன்புதூர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்கு நேற்று முன்தினம் ்வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதுபற்றி அறிந்ததும் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விைரந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் டாஸ்மாக் கடை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கும் முடிவை கைவிடுவதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் தங்களுடைய முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 
2-வது நாளாக முற்றுகை
இந்த நிலையில் மீண்டும் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுவிடுமோ? என்று எண்ணி விண்ணப்பள்ளி மற்றும் வாலிபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு குள்ளேகவுண்டன்புதூர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்து 2-வது நாளாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்ததும் டாஸ்மாக் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களிடம் பேசிய டாஸ்மாக் அதிகாரிகள் இங்க மதுபான கடை அமைக்கப்படமாட்டாது என்றதுடன், கடையை திறந்து அங்கு எந்தவித மதுபான பாட்டில்களும் வைக்கப்படவில்லை என காண்பித்தனர். இதில் பொதுமக்கள் சமாதானம் அடைந்து தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 2-வது நாளாக பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்