டி.என்.பாளையம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் கல்ஊத்து மினியப்பன் சாமி கோவில் விழா
டி.என்.பாளையம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் கல்ஊத்து மினியப்பன்சாமி கோவில் விழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் கிடாய் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
டி.என்.பாளையம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் கல்ஊத்து மினியப்பன்சாமி கோவில் விழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் கிடாய் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
ரங்கநாதர் கோவில்
டி.என்.பாளையம் வனச்சரகத்துக்கு உள்பட்ட விளாங்கோம்பை வனப்பகுதியில் ரங்கநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் விழா சாமிக்கு சுத்த பூஜையுடன் தொடங்கியது. இரவு 10 மணிக்கு மடப்பள்ளி பெரும்பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் வெள்ளிபாறை சாமிக்கு கிடாய் வெட்டப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள கல்ஊத்து மினியப்பனுக்கு கிடாய் வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சாமி அருள்பாலித்தார்.
பாரம்பரிய நடனம்
குன்றி, தொட்டகோம்பை, கடம்பூர், மாகாளிதொட்டி, கோம்பையூர், கொங்கர்பாளையம், கோபி, வாணிப்புத்தூர், வினோபாநகர், மாக்கம்பாளையம், பவானி, ஈரோடு, மல்லியம்மன் துர்க்கம், உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும், கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த கோவிலுக்கு 2,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். இதையொட்டி பக்தர்கள் பாரம்பரிய நடனம் ஆடியும், பாடல்கள் பாடியும் உற்சாகமாக விழாவை கொண்டாடினர். கோவில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளதால் வனத்துறையினரின் தீவிர சோதனைக்கு பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.