‘‘மத்திய பாரதீய ஜனதா ஆட்சியில் பொருளாதாரம் வீழ்ந்து வருகிறது’’ கே.எஸ்.அழகிரி பேட்டி
மத்திய பாரதீய ஜனதா ஆட்சியில் பொருளாதாரம் வீழ்ந்து வருகிறது என்று கே.எஸ்.அழகிரி கூறினார்.
நெல்லை:
மத்திய பாரதீய ஜனதா ஆட்சியில் பொருளாதாரம் வீழ்ந்து கொண்டிருக்கிறது என்று கே.எஸ்.அழகிரி கூறினார்.
பேட்டி
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தென் மாவட்டங்களில் வருகிற 27, 28 மற்றும் அடுத்த மாதம் (மார்ச்) 1-ந் தேதி பிரசாரம் செய்ய உள்ளார். அவர் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் பிரசாரம் செய்கிறார். அவர் எந்தெந்த இடங்களில் எப்படி பிரசாரம் செய்வது? என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
உப்பள தொழிலாளர்களுடன் சந்திப்பு, சாலையோரம் பொதுமக்கள் சந்திப்பு மற்றும் தேர்தல் பிரசார கூட்டம் எந்தெந்த இடங்களில் நடத்தலாம் என ஆய்வு செய்து வருகிறோம். ராகுல் காந்தி பிரசாரத்தை சிறப்பான முறையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
பொருளாதாரம்
வரலாறு காணாத அளவுக்கு மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி உள்ளது. இதனால் அத்தியாவசிய விலைகள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இதுபோன்ற விளைவுகளை மறைப்பதற்காக மூன்று மாதத்திற்கு ஒரு முறை புதிய பிரச்சினையை மத்திய அரசு எழுப்பி வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏறும்போது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினார்கள். ஆனால் கச்சா எண்ணெய் விலை குறையும்போது விலையை குறைக்க மறுக்கிறார்கள். இது என்ன பொருளாதாரம்?. காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதாரம் 9 சதவீதம் உயர்ந்தது. தற்போது பாரதீய ஜனதா ஆட்சியில் பொருளாதாரம் வீழ்ந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆலோசனை கூட்டம்
முன்னதாக ராகுல் காந்தி வருகையையொட்டி நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி, மாநில பொருளாளர் ரூபி மனோகரன், முன்னாள் எம்.பி ராமசுப்பு, முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை, முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் வி.பி.துரை, மாநில பொதுச்செயலாளர்கள் எம்.எஸ்.காமராஜ், செல்வம், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் ஸ்ரீவல்ல பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி
தென்காசி மாவட்ட காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் குத்துக்கல்வலசையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் சட்டநாதன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் முரளி ராஜா வரவேற்றார். மாநில சிறப்பு பேச்சாளர் எஸ்.ஆர்.பால்துரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு பேசினார்.
இதில் தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளர் விஜய் வசந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.