ரூ.1,752 கோடியில் புதிய கூட்டுக்குடிநீர் திட்ட விரிவாக்க பணிகள்

சிவகங்கை மாவட்ட மக்களின் குடிநீர் தேவைகளை நிறைவேற்றும் வகையில் ரூ.1,752 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டுக்குடிநீர் விரிவாக்கப் திட்டப்பணிகளை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.

Update: 2021-02-20 18:34 GMT
சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட மக்களின் குடிநீர் தேவைகளை நிறைவேற்றும் வகையில் ரூ.1,752 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டுக்குடிநீர் விரிவாக்கப் திட்டப்பணிகளை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.

கலந்தாய்வு கூட்டம்

சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சமுதாய கூட கூட்டரங்கில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்துறையின் மூலம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் விரிவாக்கப் பணிக்கான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி, தலைமை தாங்கினார். மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன் முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் அயினான் வரவேற்று பேசினார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பு பொறியாளர் குணசேகரன் திட்ட விளக்கவுரை ஆற்றினார்.

அமைச்சர் தொடங்கி வைத்தார்

கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கான விரிவாக்கப்பணியினை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
சிவகங்கை மாவட்ட மக்களின் குடிநீர் தேவைகளை நிறைவேற்றும் வகையில் ரூ.1752.73 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டுக்குடிநீர் விரிவாக்கப் திட்டப்பணிகளை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 4-ந்தேதி தொடங்கி வைத்தார். இதை வெறும் அறிவிப்பாக இல்லாமல் தற்போது திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தை 30 மாத காலத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் 3 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 11 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளடக்கிய 2 ஆயிரத்து 452 ஊரக குடியிருப்புக்கள் பயன்பெறும். இத்திட்டத்திற்கு நிதி ஆதாரமாக தேசிய விவசாய மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி ரூ.1537.59 கோடியும் மற்றும் மாநில அரசின் பங்களிப்பாக ரூ.215.14 கோடியும் என மொத்தம் ரூ.1752.73 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்
இந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி மாநில துணை செயலாளர் கருணாகரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ராஜா, ஒன்றிய குழுத்தலைவர்கள் மஞ்சுளா பாலச்சந்தர், (சிவகங்கை) முனியாண்டி (இளையான்குடி). ராஜேஸ்வரி (காளையார்கோவில்),ஒன்றிய செயலாளர் செல்வமணி மற்றும் ஊராட்சி மன்றத்தலைவர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் தங்கரெத்தினம் நன்றி கூறினார்.
முன்னதாக சிவகங்கை ரோஸ் நகரில் ஒருங்கிணைந்த அலுவலகம் கட்டும் பணிக்கு பூமி பூஜையை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

மேலும் செய்திகள்